Uncategorized

மொழிமீது நம்பிக்கை

21st February is International Mother Language Day and our blog is hosting a 2 day celebration of languages. A series of blog posts by people from different walks of life – sharing their thoughts on languages, memories and more. International Mother Language Day is an observance held annually on 21 February worldwide to promote awareness of linguistic and cultural diversity and multilingualism.

(This post was sent by N.Chokkan. N.Chokkan (என். சொக்கன்) is an avid blogger and writer. The Tamil translator of many of our books, he encourages his children to write too.)
In this post, he talks about the experience of a unique translation mission : “A few months ago, I had the chance to translate a rare document written by 50+ factory staff about the problems they face in a factory. They only knew Tamil and filled the HR survey form in Tamil. Their HR team hired me to translate it into English so that their bosses (in another country) could understand. I was moved when I read those pages : they knew their bosses don’t know Tamil, but they still shared those comments (which are a matter of life for them!) and the faith they had in their language was amazing. I had the chance to transmit that faith and convey their message to the right folks.”
**********
நான் தொழில்முறை மொழிபெயர்ப்பாளன். அதாவது, இலக்கியப் பிரதிகளை அல்லாமல், வணிகப் பிரதிகளை மொழிபெயர்க்கிறவன். அம்மொழிபெயர்ப்புகள் பலவற்றில் என் பெயர்கூட வராது. அதை எதிர்பார்க்கவும் கூடாது.
இப்படிப் புத்தகங்கள், கதைகள், கட்டுரைகள், கவிதைகள், நீதிமன்ற ஆவணங்கள், பயனாளர் கையேடுகள் என்று எத்தனையோ மொழிபெயர்த்துள்ளேன். அவற்றுள் எனக்கு மிகவும் மகிழ்ச்சி தந்த பணி எது என்று யோசித்தால், சில கிறுக்கலான காகிதங்களை மொழிபெயர்த்ததுதான்.
இக்காகிதங்களை எழுதியவர்கள் சென்னையில் சில தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள். அவர்களிடம் அவர்களது பணியிடச்சூழல், மேலதிகாரிகள், சம்பளம், பாதுகாப்பு உள்ளிட்ட பல விஷயங்களைப்பற்றி நிறுவனத்தினர் கருத்துக் கேட்டிருக்கிறார்கள், அவர்களும் எழுதித் தந்திருக்கிறார்கள், தமிழில்.
மேலிடத்தில் உள்ளோருக்குத் தமிழ் வாசிக்கத் தெரியாது. ஆகவே, அவர்களுடைய நிறுவனக் கொள்கைகளின்படி, அக்காகிதங்கள் எனக்கு மொழிபெயர்ப்புக்கு வரும். நானும் அவற்றை ஆங்கிலத்தில் மாற்றித் தருவேன்.
இங்கே என் பணி, தொழிலாளர்கள் தங்களுடைய பாமர மொழியில் எழுதியிருப்பதைக் கார்ப்பரேட் சிங்கங்களுக்குப் புரியும்வண்ணம் ஆங்கிலத்தில் தரவேண்டும். அதேசமயம் அதில் இருக்கும் ஜீவன் குறைந்துவிடக்கூடாது. அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை மேலிடம் நேரடியாகப் புரிந்துகொள்ளவேண்டும், அப்படி மொழிபெயர்ப்பு அமையவேண்டும்.
அந்தக் காகிதங்களில்தான் எத்தனை கோபங்கள், நன்றியுணர்வுகள், ஆதங்கங்கள், எரிச்சல்கள், அக்கறைகள், கவலைகள். ஒவ்வொருவரும் தங்கள் நிறுவனம்மீது வைத்திருக்கும் நம்பிக்கையை, கோபத்தை, வெறுப்பை, ஆசைகளை, எதிர்பார்ப்புகளை, குடும்பத்தின்மீது அவர்களுக்கிருக்கும் பாசத்தை, சிலருடைய பொறாமைகளை, பேராசைகளை, சுற்றியிருக்கும் பிறருடைய பிழைகளைக் கண்டு ஏற்படும் கொதிப்பையெல்லாம் அந்தத் தாள்களில் நான் வெளிப்படையாகக் கண்டேன். அவற்றில் ஏராளமான எழுத்துப்பிழைகள், இலக்கணப்பிழைகள் இருக்கும், அவற்றை ஒருபோதும் பொருட்படுத்தத் தோன்றியதில்லை.
காரணம், அத்தாள்களை எழுதும்போது அவர்கள் என்ன உணர்வுநிலையில் இருந்திருப்பார்கள் என்பதை என்னால் வெளிப்படையாகக் காண இயன்றது. தங்களுடைய பெரிய பாஸ்களுக்குத் தமிழ் தெரியாது என்பது அவர்களுக்குத் தெரியும். ஆனாலும், தாங்கள் நினைப்பதைச் சொல்லிவிடவேண்டும் என்கிற அந்த முனைப்பை என்னவென்று சொல்வது? கிட்டத்தட்ட, கடவுளுக்குக் கடிதம் எழுதும் சிறு பிள்ளையைப்போன்ற மனமல்லவா அது?
இந்தத் தொழிலாளர்களுக்கு Sugar coat செய்யத்தெரியாது. நினைத்ததை நினைத்தபடி சொல்வார்கள், ஒரு விஷயம் தவறு என்று நினைத்தால், யார்மேலும் குற்றம் சாட்டுவார்கள், நிறுவனத்தை மேம்படுத்தத் தங்களால் இயன்ற யோசனைகளைச் சொல்வார்கள், இவையெல்லாம் தங்கள் மேலதிகாரிகளுக்கு எப்படியாவது சென்று சேர்ந்துவிடும் என்ற நம்பிக்கை அந்த எழுத்துகளில் தெரியும். அதன்மூலம் தங்களுக்கு நல்லது நடக்கும் என்கிற எதிர்பார்ப்பும் தெரியும்.
ஆகவே, வேறெந்த ஆவணத்தையும்விட, இவற்றை மிகுந்த கவனத்துடன் மொழிபெயர்த்துத் தருவேன். எவ்விதத்திலும் தவறான உணர்வுகள் வெளிப்பட்டுவிடாதபடி ஆங்கிலச் சொற்களைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துவேன். ஒரே ஒரு பத்தியை மொழிபெயர்க்கக் கால் மணி நேரம் ஆனதுகூட உண்டு!
என் ஒரே பிரார்த்தனை, அந்த மொழிபெயர்ப்புகளை ‘வேறு யாரும்’ எடிட் செய்துவிட்டுப் பெரிய பாஸ்களுக்கு அனுப்பியிருக்கக்கூடாது.
காரணம், அந்தக் காகிதங்களில் தொழிலாளர்கள் தங்கள் மேலதிகாரிகளைக் கண்டபடி நேரடியாகவே விமர்சித்திருப்பார்கள். அவற்றைப் பெருந்தலைகள் அப்படியே படித்தால், நிச்சயம் விசாரணை நடக்கும், சில தலைகள் உருளும். இதனைப் பல இடைநிலை மேலாளர்கள் விரும்பமாட்டார்கள். கீழ்மட்ட எரிச்சல் மேல்மட்டத்துக்குத் தெரியாமல் வடிகட்டுவதைத் தங்கள் கடமையாகக் கருதுகிறவர்கள் இவர்கள்.
ஆகவே, HR குழுவில் யாராவது என் மொழிபெயர்ப்புகளில் தேன் தடவிதான் மேலிடத்துக்கு அனுப்புவார்கள் என்று என் மனம் சொல்கிறது. வெறும் சொற்களைமட்டும் கொண்ட ஒருவனால், அப்படி நிகழக்கூடாது என்று எதிர்பார்ப்பதைத்தவிர வேறு என்ன செய்துவிட இயலும்?

Image Source : The Blue Diamond Gallery

Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

DISCLAIMER :Everything here is the personal opinions of the authors and is not read or approved by pratham books before it is posted. No warranties or other guarantees will be offered as to the quality of the opinions or anything else offered here