மொழிபெயர்ப்பாளர் நானுங்க!
by Vetri
ஒரு சிறிய பரிசோதனையோடு தொடங்கலாம்: ஓவியர், எழுத்தாளர், காவலர், அரசியல்வாதி. சட்டென இந்த சொற்களைப் படித்தவுடன் உங்கள் மனதில் தோன்றும் பிம்பம் என்னவாக இருந்தது. அவற்றில் எத்தனை பெண்கள் தோன்றினர். இதையே உங்கள் நண்பர்களிடத்தும் குழந்தைகளிடத்தும் செய்து பாருங்கள்!
தமிழில் இர் விகுதி மரியாதையைக் குறிக்கப் பயன்படுவது, இலக்கண ரீதியாக அதில் எந்தப் பாலினக் குறிப்பும் கிடையாது. என்றாலும் தினசரி வழக்கில் பெரும்பாலும் இர் விகுதி ஆணை நினைவுபடுத்துவதாக உள்ளது. பேச்சுவழக்கிலும் இருக்காரா என்பது ஆணையும், இருக்காங்களா என்பது பெண்ணையும் குறிப்பதாகப் பயன்படுத்தப்படுகிறது.
மொழிபெயர்ப்புகள் சீர்மைப்படுத்தத் தொடங்கிய பொழுதில் கவனித்த ஒன்று உண்டு. அதிலும் குறிப்பாக சிறார் கதைகளில்! பொதுவாக விலங்குகளை அஃறிணையாகவே தமிழ் குறிப்பிடுகிறது. ஆனால் ஆங்கிலம் அப்படியல்ல, விலங்குகளுக்கு பாலினம் அளித்தே அழைப்பது ஆங்கில சிறார் கதைகளின் வழமை. அப்படியிருக்கும் போது நிறைய அப்பா குருவிகளும் அம்மா குருவிகளும் வரும்தானே. அவற்றில் அப்பா குருவிகள், நாய்கள் எல்லாம் வந்தார்கள், போனார்கள். அம்மா குருவிகள் எல்லாம் வந்தாள்கள், போனாள்கள். இங்கே மரியாதை, அணுக்கம் என்று இரண்டு விசயங்கள் செயல்படுகின்றன.
அப்பா மீதான மரியாதை, அம்மாவுடனான அணுக்கம். ஆனால் இவையெல்லாம் வெறுமனே ஒரு மொழிபெயர்ப்பாளரின் சொந்த அனுபவத்திலிருந்து மட்டும் வருபவையா? எல்லா மொழிபெயர்ப்பாளர்களும் அப்பாவிடம் மரியாதையான தூரத்தையும், அம்மாவிடம் மரியாதை தேவையில்லாத அணுக்கத்தையும் மட்டுமே கொண்டிருக்கிறார்களா என்ன. இவை தனிநபர்களைத் தாண்டி மொழிக்குள் செயல்படும் பாகுபாடு என்றே வரையறுக்கத் தோன்றுகிறது. இப்படித்தான் நாம் வாசித்திருக்கிறோம், எழுதியிருக்கிறோம், தமிழுக்குள் அப்படித்தான் பழகியிருக்கிறோம்.
தற்போது நிறையவே இர் விகுதியை பால்பொதுமையோடு சில பத்திரிகைகளிலும், எழுத்து வடிவிலும் பயன்படுத்துகிறோம். ஆனாலும் பொதுப்புத்தியில் அது ஆண் அடையாளத்தோடே புழங்கும்போது, அந்தப் பயன்பாடு மாத்திரம் போதுமானதாக இருப்பதில்லை.
பல்வேறு மொழியியல் கோட்பாடுகளும் கூட, நாம் புழங்கும் மொழி நமது எண்ணங்கள், முடிவுகளின் மீது தாக்கம் செலுத்துவதாகவே வாதிடுகின்றன. மொழிபெயர்ப்பின் இன்பங்களில் ஒன்று வெவ்வேறு மொழிகளின் கண்ணாடிகளைப் போட்டுக்கொண்டு உலகைக் காண வாய்ப்பது. நமது தாய்மொழியின் உள்ளார்ந்த சில பாகுபாடுகள் நமக்கு சட்டென்று உரைப்பதில்லை. அதுவே வேறொரு மொழியுடன் ஒப்பிட்டு நோக்கும்போது, அல்லது மொழிகளுக்கிடையே மாறி மாறி நடக்கும்போதோ அவை பிடிபட்டுவிடும். அப்படித்தான் இவையும்.
எதுவுமே மாறாதது இல்லையே. பகுத்தறிவின் துணையோடு சற்றே ஆராய்ந்தால் பாகுபாட்டுக் குறையில்லாத மொழியை நம் சிறார் கதைகளுக்கும் பயன்படுத்த முடிகிறது. இச்சிறிய விசயங்களின் தாக்கம் மிகப்பெரியதாகவும் இருக்கலாம். நாம் படித்துப் பழகி வந்த மொழியின் துணையுடனே நாம் உலகை எதிர்கொள்கிறோம். நமது குழந்தைகளுக்கான உலகை இன்னும் சிறப்பானதாக உருவாக்க இவை உதவலாம். சமீபத்திய அனுபவமொன்று இவற்றைக் குறித்தெல்லாம் யோசிக்க உதவியது. அந்த அனுபவம் இதுதான்…
சமீபத்தில் நாங்கள் பதிப்பித்த கதைகளில் ஒன்று ஷால்ஸ் மகாஜன் எழுதி, ப்ரீத்தம் தர் படங்கள் வரைந்த மியாவ் மியாவ் வேட்டை. வழிதவறிப் போன ஒரு குட்டிப் பூனையின் சாகசங்கள்தான் கதை. பூனைக்குட்டியின் பார்வையிலேயே அது எப்படி இலைகளைக் கொன்று, ஒரு மனித பூதத்தோடு சண்டையிட்டு, ஒருவழியாக தன் வீட்டுக்குத் திரும்பி வந்தது என்று கதை சொல்கிறது. ஆங்கிலத்தில் இதன் தலைப்பு The Mighty (little) Hunter. கதையின் முதல் வரியே I am a hunter என்றுதான் இருக்கிறது.
இந்தக் கதை சற்றே பாடல் தொனியில் அமைந்ததும் கூட. எனவே இந்த முதல் வரிக்கு சட்டென்று தோன்றும் மொழிபெயர்ப்பு வேட்டைக்காரன் நானுங்க என்பதுதான். ஆனால் அதில் இரண்டு பிரச்சினைகள் தோன்றின. முதலாமது, ஆங்கிலக் கதையில் எந்த இடத்திலுமே பூனைக்குட்டி ஆணா பெண்ணா என்று சொல்லப்படவில்லை. அப்புறம் எப்படி மொழிபெயர்ப்பாளருக்கும் எங்களுக்கும் வேட்டைக்காரன் என்று சொல்லத் தோன்றியது? வேட்டையாடுவது என்றாலே ஆணாகத்தான் இருக்கவேண்டும் என்ற உள்ளுணர்வா? இல்லை அப்படித்தான் இதுவரை நாம் படித்த பெரும்பாலான கதைகள் இருந்திருக்கின்றன என்பதாலா?
சரி இதற்கு என்ன தீர்வு என்று யோசித்தபோது வேட்டைக்காரர் என்று சொல்லலாமா என்று தோன்றியது. ஏற்கனவே சொன்னதுபோல விலங்குகளை அஃறிணையாகவே தமிழ் குறிப்பிடுகிறது. நாங்களும் கதைகளில் ஓரிரு விலங்குக் கதாபாத்திரங்கள் மையமாக வரும் கதைகள் தவிர்த்து பிற இடங்களில் அவ்வாறே குறிப்பிடுகிறோம். மட்டுமில்லாமல், இந்தக் கதை தன்மை ஒருமையில் சொல்லப்பட்டிருக்கிறது. பூனைக்குட்டி வேட்டைக்காரர் தன்னையே ர் விகுதியில் அழைத்துக் கொள்வது பொருத்தமாகப் படவில்லை.
எனவே அந்த வரியை இப்படி எழுதிவிட்டோம் வேட்டையாடுவேன் நானுங்க.
வெரோனிகா ஏஞ்சல் அவர்களின் சரளமான மொழிபெயர்ப்பில் முழு கதையையும் இங்கே படிக்கலாம்: https://storyweaver.org.in/stories/117223-miyaav-miyaav-vettai
Vetri is an Assistant Editor for Tamil at Pratham Books and a writer-translator, who often feels like he is banished to live between English and Tamil for eternity.
