Pratham Books

மொழிகளைக் கொண்டாடுதல்

by Vetri

 

Translators add new creative aspects to a story, and with more translations, we see a story in a new light. With the help of our translators and experts, we at Pratham Books are bringing more storybooks to Tamil and spreading the joy of reading among children.

ப்ரதம் புக்ஸில் இந்த வாரம் மொழிகளையும், மொழிபெயர்ப்பையும் கொண்டாடுகிறோம். செப்டம்பர் 30 சர்வதேச மொழிபெயர்ப்பு தினமாக கடந்த சில ஆண்டுகளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. நாடுகளை, கலாச்சாரங்களை ஒன்றிணைக்கும் பாலமாக விளங்கும் மொழிசார் துறைகளில் பணியாற்றுவோருக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்நாள் கடைபிடிக்கப் படுகிறது. 30 செம்டம்பர் பைபிளை மொழிபெயர்த்த புனிதர் ஜெரோமின் தினமாகும். 

கடந்த பதிற்றாண்டில் ப்ரதம் புக்ஸ் 22 மொழிகளில் 4000 புத்தகங்கள் பதிப்பித்திருக்கிறோம். எங்கள் இணைய தளமான ஸ்டோரிவீவரில் 270 மொழிகளில் 25000 கதைகளுக்கு மேல் இருக்கின்றன. அவை தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி, மராத்தி போன்ற பெரும்பான்மை மொழிகள் மட்டுமின்றி, சுர்ஜாபூரி, சௌரா, முண்டா, கோண்டி போன்ற பழங்குடி மொழிகளிலும் கிடைக்கின்றன. 

மொழிபெயர்ப்பென்பதே இறுதிநோக்கமாக இல்லாது, அனைத்து குழந்தைகளுக்கும் தாய்மொழிகளில் படப்புத்தகங்கள்  கிடைக்கச் செய்யும் ஒரு சூழலை உருவாக்க முயல்கிறோம். தமிழைப் பொருத்தவரை பல எழுத்தாளர்களின், மொழிபெயர்ப்பாளர்களின், துறைசார் வல்லுநர்களின் துணையுடன் பல்வேறு படப்புத்தகங்களை தமிழுக்குக் கொணர்ந்திருக்கிறோம். இவை குறைந்த விலையில் அச்சிலும், இலவசமாக வாசிக்க ஸ்டோரிவீவர் தளத்திலும் கிடைக்கின்றன. எழுத்தாளர் சாலை செல்வம் தமிழில் எழுதிய சிரட்டை சுப்பம்மா நூல் ஆங்கிலம் உள்ளிட்ட நான்கு மொழிகளில் வாசிக்கக் கிடைக்கிறது. ஒரு புத்தகம் வெவ்வேறு மொழிகளில் வாசிக்கக் கிடைக்கும் போது அதன் பல பரிமாணங்கள் வெளிப்படுகின்றன, படைப்பூக்கமிக்க பல மொழிபெயர்ப்பாளர்கள் தங்களின், தங்கள் மொழியின் படைப்புத்திறனைக் கொண்டு அதை மீட்டுருவாக்கம் செய்யும்போது அது பட்டைத்தீட்டப்பட்டு ஜொலிக்கிறது. உதாரணத்துக்கு சிரட்டை சுப்பம்மா கதையின் இந்திப் பெயர் ‘தேங்காய் சிற்பி சுப்பம்மா.’ ஆங்கிலத்தில் ‘சுப்பம்மாவுக்கு கைவினைப் பொருட்கள் செய்யப்பிடிக்கும்.’

 சிரட்டை சுப்பம்மா கதையை இங்கே வாசிக்கலாம்:

Illustration by Vibha Surya

இந்த சிறப்பேதான் மொழிபெயர்ப்பாளர்களுக்கு சோதனையாகவும் அமையும். 

வேறொரு மொழியின் தொனியை, கலாச்சாரப் பின்னணியை நமதில் மீளுருவாக்கம் செய்வது எளிதல்ல. மேலும் குழந்தைகளுக்காக மொழிபெயர்க்கிறோம் எனும்போது ஒரு கூடுதல் கவனம் வந்து அமர்ந்துகொள்கிறது. எழுதவும் வாசிக்கவும் கற்றுக்கொண்டிருக்கும் அவர்கள், மொழியை இன்னொரு உணர்வாகவே எதிர்கொள்கிறார்கள். உலகத்தைத் தொட்டுப் புரிந்துகொள்வது போல, பேசியும் கேட்டும் புரிந்துகொள்கிறார்கள். எனவே நம் மொழியின் இயல்பான தாளநயத்துக்கு ஏற்பவும் நாம் எழுதவேண்டியுள்ளது. இவையாவையும் இலக்கணத்தின் விரிந்த எல்லைகளை மீறாமலே செய்யவும் வேண்டும்.

இவற்றுக்கு உதவ, இத்தனை வருட மொழிபெயர்ப்பு அனுபவத்திலிருந்தும், வல்லுநர்களுடன் உரையாடல்களும், பயிற்சிப் பட்டறைகளும் நடத்தியதிலிருந்தும் கிடைத்த பட்டறிவை இந்த வாரத்தில் நம் மொழிகள் சிலவற்றில் குறிப்புகளாக, காணொளிகளாகப் பகிர்கிறோம். மொழிபெயர்ப்பைக் குறித்து ஆர்வம் கொண்ட எவருக்கும் இவை உதவுபவை, உற்சாகமூட்டுபவை. சமீபத்தில் நாங்கள் நடத்திய ஒரு உரையாடலில், எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான ஜெர்ரி பிண்ட்டொ குறிப்பிட்டது இது “காற்றியக்கவியலின் விதிகளின் படி பம்பிள்பீ வண்டால் பறக்கவே முடியக் கூடாது. சரியா? அதேபோல மொழிகளின் விதிகளின்படி, யாராலும் மொழிபெயர்க்க முடியக்கூடாது. எனவே நாம் எடுக்கும் ஒவ்வொரு மொழிபெயர்ப்புசார் முடிவும் சரியானதாக இருக்கவேண்டும் என்பதை மறந்துவிட வேண்டும். இறங்கி மொழிபெயர்க்கத் தொடங்கவேண்டும். பின், அதை எவ்வளவு முடியுமோ அவ்வளவு சரியாக செய்யவேண்டும். பின் மனிதர்களின் எல்லைகளை ஒப்புக்கொள்ளும் ஒரு பணிவை அடைய வேண்டும், நமது இயலாமைகள் முரண்பாடுகளை ஒப்புக்கொண்டு அந்த பிரதியை உலகுக்கு அளிக்க வேண்டும்.”

அதே உரையாடல் தொடரில் வங்காள-ஆங்கில மொழிபெயர்ப்பாளர் அருணவா சின்ஹா குறிப்பிட்டது “நீங்கள் மொழிபெயர்க்கும் மொழியில் ஒரு சொல்லோ, வழக்கோ இல்லையென்றால் அதை அப்படியே வைத்துக்கொள்வதில் பிரச்சினையே இல்லை. தனது ஃபெலூடா தொடரை எழுதும் போது கதாநாயகனின் துணையாளுக்கு சத்யஜித் ரே ‘சாட்டிலைட்’ என்று பெயரிட்டார். அந்த சொல் வங்காளத்தில் பிரபலமாகி இப்போது பலரும் அதே பொருளில் பயன்படுத்துகின்றனர். ரே வங்காளத்துக்கு ஒரு புதிய சொல்லைக் கொடுத்தார்.”

தொடர்ந்து நாங்கள் பலவற்றையும் #CelebratingLanguages என்ற ஹேஷ்டேகில் வெளியிடுகிறோம். எங்களோடு இணைந்திருங்கள். மொழிபெயர்ப்பு குறித்த உங்கள் அனுபவங்கள், கேள்விகள், கருத்துகளையும் எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

 

Vetri is an Assistant Editor for Tamil at Pratham Books and a writer-translator, who often feels like he is banished to live between English and Tamil for eternity. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *